இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகம் : அரசின் சாதனைகளை பட்டியலிட்ட சபாநாயகர் அப்பாவு

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார்.

சபாநாயகர் அப்பாவு தனது உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நோக்கில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை தமிழ்நாடு அரசு அடைந்துள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது . மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

பேரிடர் நிவாரணம், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகம். ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 24,926 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது. திராவிட மாடல் அரசு அனைவருக்குமான அரசாக திறம்பட செயல்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தமிழ்நாடு மேம்பாட்டு செயல்திட்டம்-2024 என்ற சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட உள்ளது. ஊரக, நகர்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வசதிகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் அமலாக உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்தி செல்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான கொள்கை தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தனது உரையில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.