ஆலங்குடியில் குடிபோதையால் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் : அரிவாளால் வெட்டியதில் இளைஞர் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குடிபோதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்லகணபதி என்கிற விஜய்(21). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். ஆலங்குடி கல்லுகுண்டு கரையில் நேற்று இரவு குடிபோதையில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரச்சனையில் சின்னமுத்து என்பவர் தலையில் விஜய் அடித்ததாகவும், அதனால் அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கலிபுல்லா நகர் பிள்ளையார் கோவில் அருகில் சென்ற விஜயை எதிர் தரப்பு கோஷ்டியினர் அரிவாளால் ஓடிச்சென்று வெட்டியுள்ள நிலையில் கீழே விழுந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் அறிந்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார் விஜயின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவிகாவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் இரவு முழுவதும் நகரில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தப்பியோடிய எதிரி கும்பலை தொடர்ந்து தேடி வருவதால் ஆலங்குடி பகுதியில் பதற்றம் நிலவியது.