அ.தி.மு.க.,வில் ஓ.பி.எஸ்.,க்கு மாறாக இ.பி.எஸ்., செயல்பட்டால் தனிமையாவார் புதுகையில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அதிரடி

‘‘அ.தி.மு.க.,வில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓ.பி.எஸ்., எண்ணம், இதற்கு மாறாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டால் அவர் தனிமைப்படுத்தப்படுவார். அவரை ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அது விரைவில் நடக்கும்,”  என்று அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணியின் அ.தி.மு.க., செயலாளர் ராஜசேகரன் மாவட்ட அலுவலகம் கட்டியிருந்த நிலையில் அதை இன்று அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம் திறந்து வைத்து பேசியதாவது: வருகின்ற  2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., தலைமையில் தான் அ.தி.மு.க., நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனித்து நின்று அதிக இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது அ.தி.மு.க.,வோடு பா.ஜ., உள்ளது. அதனால் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.

அ.தி.மு.க., கட்சி மற்றும் ஆட்சி தமிழகத்தில் நூறாண்டு காலம் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதை நோக்கி அ.தி.மு.க., பயணிக்கும், ஓ.பி.எஸ்., கருத்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கினால் அனைவரின் தாழ்வு என்ற நிலையில் இருக்கிறார். இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பதவியில் இருப்பவர்கள் எதிர்கின்றனர். இதை அவர்கள் தொடர்ந்து எதிர்த்து கொண்டு இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கிவிட்டு நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க., விவகாரத்தில் பா.ஜ., தலையிடுவதாக தெரியவில்லை, நாங்கள் விரும்புவது ஜெயலலிதாவின் எண்ணப்படி எம்.ஜி.ஆர்., எதற்காக கட்சி ஆரம்பித்தாரோ அதன்படி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

பிரிந்து சென்ற சசிகலா, டி.டி.வி., எடப்பாடி பழனிச்சாமி பண்ருட்டியார், சைதை துரைசாமி,  ஏ.சி.சண்முகம் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். ஒன்றிணைய மாட்டோம் என சில காரணங்களால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அந்த கருத்தை கூறி வருகிறார். சில முன்னாள் அமைச்சர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரது ஒற்றுமைக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவரவில்லை என்றால் அவர் தனிமைப்படுத்தப்படுவார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். கூடிய சீக்கிரம் பொதுக்குழு இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பி.எஸ்., கூறியுள்ளார் அது விரைவில் நடக்கும். இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.

திருமண விழாவில் பங்கேற்பு

அதிமுக விவசாய அணி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் வாராப்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இராமசாமி நெட்டையர் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. விழாவில் மணமக்கள் சாமியய்யா, பிரமீனா ஆகியோரது திருமணத்தை ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நடத்தி வைத்தார், விழாவில் துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள்  ராஜசேகரன், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்கள்.