அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிக்கட்ட வாதம் 12 மணிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார். ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.  இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும், தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.

அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர் என வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை இன்று நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர். இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் ஏற்கனவே முடிவு செய்துள்ளதால் இன்று இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப இரு தரப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + = 21