அ.தி.மு.க. அலுவலகத்திற்கு  ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு செல்ல போலீஸ் அனுமதி மறுத்துள்ளது

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்றைய தினம் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதல் பெரிய கலவரமாகியது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார். இது போன்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டன. இதைதொடர்ந்து ஓ.பி.எஸ் தலைமையில் அவர்களும் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்ல முடிவு செய்து காய் தகர்த்தி வருகிறார்கள். இதற்காக ராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லசிடம் முன்னாள் எம்.எல்.ஏ. வும், ஓ.பி.எஸ்சின் தீவிர ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்களால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்தல் மூலம் 6.12.21 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் கட்சி மக்கள் பணியையும், அரசியல் பணியையும் செய்து வருகிறது. இந்த சூழலில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை 11-ந்தேதி கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கு குவிக்கப்பட்டிருந்த ரவுடிகள், குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘சீல்’ வைத்த உத்தரவை ரத்து செய்ததுடன், கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக நாங்கள் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல், அதனை அசல் வழக்கே தீர்மானிக்கும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடரும் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் சென்று கட்சி பணிகளை ஆற்றிட எந்தவித சட்ட தடையும் இல்லை. எனவே எதிர்வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் வந்து செல்ல எந்த இடையூறும் இல்லாத வகையில் கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீங்கள் (ஓ.பி.எஸ். தரப்பினர்) மீண்டும் அங்கு செல்வதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய சூழலில் நீங்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சீலை உடனடியாக அகற்றி அலுவலக சாவியை எடப்பாடிபழனி சாமி தரப்பினரிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வசமே இருந்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதையே கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் 2 நீதிபதிகள் கடைசியாக அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறி உள்ளனர். இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தற்போதைய சூழல்கள் உள்ளன. இதனால் அவர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தற்போதைய சூழலில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் நீங்கள் செல்வதாக இருந்தால் உரிய சட்ட அனுமதியை வாங்கி வந்த பிறகு செல்வதே சரியாக இருக்கும் என்று ஓ.பி.எஸ். தரப்பினரிடம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று கோர்ட்டிலோ, அல்லது வருவாய் அதிகாரியிடமோ அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.