
அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசு உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து எடுத்துரைக்கவும், பேருந்துகளின் செயல்பாட்டினை கண்காணிக்கவும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்,அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வாகனங்களின் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், முதலுதவிப் பெட்டி, அவசர வழி, தீயணைப்புக் கருவி, படிக்கட்டுகள், கதவுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 151 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு,14 குறைபாடுடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு, சரிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும்.
மேலும், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் ஊர்தி ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.