அரியலூர் பகுதி கோவில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

அரியலூர் பகுதியில் கோவில்களில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

அரியலூர் அருகே, ஓ. கூத்தூர் கிராமத்தில் எழுத்தருளியிருக்கும் வீரனார், கருப்பண்ணசாமி, பச்சையம்மன், பூங்காயி அம்மன் ஆகிய ஆலயங்களுக்கு, மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஓட்டக் கோவில் டி .ஆர். ஆர். டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் டி. ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். செங்கமலை மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை, சிவாச்சாரியார்கள் கலையரசு, சரவணன், சாமிநாதன் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர்.

ஓ.கூத்தூர் மெயின் ரோட்டில், தொழிலதிபர் முருகேசன் மற்றும் அவர் சார்ந்த, பக்த பிரமுகர்களுக்கு பாத்திய பட்ட, பாப்பாத்தி அம்மன் ஆலயத்தில் உள்ள, விநாயகர், தையல்நாயகி, பாப்பாத்தி அம்மன், நல்லப்பர், வீர முத்தையா, கருப்புசாமி, மருதையன், வெள்ள முத்து ஆகிய ஆலய பரிவார தெய்வங்களுக்கு, ஜீர்னோத்தாரண, அஷ்டபந்தன, மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. குன்னம் ஸ்ரீனிவாச பட்டாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தினர், விழாவில் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொய்யாத நல்லூர் கிராமத்தில் உள்ள, ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ பெரியநாயகி அம்மன் திருக்கோயில்களுக்கான கும்பாபிஷேக விழா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கு. தங்கவேலு உடையார் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது, கோயிலின் அறங்காவலர் ஆ. பழனிவேல் பூசாரி மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.

அரியலூர் அருகே உள்ள, அம்மாகுளம் கிராமத்தில் எழுந்தருளும் விநாயகர், காளியம்மன், கருப்பண்ண சுவாமி, கன்னிமார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை சேர்ந்த, சிவராஜ் சிவாச்சாரியார், சங்கர் சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நிறைவு செய்தனர், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன், சுவாமி திருவீதி உலா மற்றும் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்த கோயில் தர்மகர்த்தாக்கள் ரவி, ராமலிங்கம், சிவக்கொழுந்து, பொன் ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.