அரியலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் நகராட்சி கூட்ட மன்ற வளாகத்தில் நடைபெற்ற நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு, அதன் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி முன்னிலை வகித்தார். அலுவலர் செந்தில்குமார் தீர்மானங்களை படித்தார்.
அண்மையில் காலமான அரியலூர் நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரனுக்கு நினைவஞ்சலி செலுத்திய பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தில், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக மேம்பாட்டு பணிக்கு, 18.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதற்காக, மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.
அரியலூர் நகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று, டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்களை அழித்தல், டெங்கு நோய் ஏற்பட்டவர்களை மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல் ஆகிய பணிகளை, கவிக்குயில் மகளிர் சுய உதவி குழுவினர் மேற்கொண்ட வகையில், உத்தேச செலவினம் ரூபாய் 15 லட்சத்துக்கு மன்ற அங்கீகாரம் வழங்குவது.
தமிழ்நாடு முதலமைச்சர் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளதால், அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள, அரியலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு, அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு ஆகியவற்றை, அரியலூர் நகராட்சி ஏற்று செயல் படுத்துவது உட்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூர் நகராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ReplyForward |