
அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.
பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் நம்பிராஜ் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். வேல்முருகன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அரசு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பெரியசாமி, கருணாநிதி, செல்வகுமார், பாண்டியன், செந்தில்குமார், பொய்யாமொழி, சரவணசாமி, கார்த்திக், சிவக்குமார், வேலுமணி, மாயவேல், இளம்பரிதி, ஜவகர், கோபிநாத், ராஜா இளங்கீரன், ராகவன், ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த நல்லப்பன் ஆசிரியர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.