அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு: தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல், முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழக்கும் சட்ட மசோதாவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். மருத்துவப் படிப்பை தொடர்ந்து அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு. 3.45 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் உயர்நிலை வகுப்புகளில் படிக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால் , அரசுப்பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தீர்வுகளை பரிந்துரைகளை செய்திடவும், ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வது என்று கடந்த 4 ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆதரவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகள் பாதிக்காமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.