அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் திவால் நிலையின் விளிம்பில் பாகிஸ்தான்

திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும். அந்நிய செலாவணி கையிருப்புக் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு பாகிஸ்தான் உள்ளாகி இருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் 294 மில்லியன் டாலர் (ரூ.2,410 கோடி) அளவில் அந்நிய செலாவணி இருப்பு குறைந்தது.தற்போதைய இருப்பைக் கொண்டு வெளிநாடுகள் மற்றும் ஐஎம்எஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெற்ற கடனை பாகிஸ்தானால் திருப்பிச் செலுத்த முடியாது. இதனால், இலங்கைப் போன்று மோசமான பொருளாதாரச் சூழல் விரைவில் பாகிஸ்தானில் ஏற்படக்கூடும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஸ்காக் தார் கூறுகையில், “தற்போது இக்கட்டான சூழலில் இருக்கிறோம். ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறாது” என்று அவர் தெரிவித்தார். இவ்வாண்டு தொடக்கம் முதல் பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. 2018 ஆகஸ்ட் முதல் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அப்போது பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 10.5 பில்லியன் டாலராக (ரூ.86,100 கோடி) இருந்தது. இந்நிலையில் தற்போது அது 5.8 பில்லியன் டாலராக (ரூ.47,560 கோடி) சரிந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் ஜூலை – நவம்பர் வரையில் பாகிஸ்தானில் 430 மில்லியன் டாலர் (ரூ.3,526 கோடி) அந்நிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது 51% சரிவு ஆகும். தற்போதைய சூழல் தொடருமானால் 2022-23 நிதி ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானின் அந்நிய செலவாணி கையிருப்பு 4 பில்லியன் டாலராக (ரூ.32,800 கோடி) குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.