அதிமுக ஒற்றுமைக்கு நான் தான் காரணம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக ஒற்றுமைக்கு நான் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், சோதனை நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவையில் 50 ஆண்டுகாலம் இல்லாத ஆட்சியை தந்ததால் மக்கள் தனக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

மேலும், லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின் போது 13 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், தமது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வெளியான தகவலில் உண்மையில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஒற்றுமைக்கு நானே காரணம். அதிமுக ஆட்சி தொடர்ந்ததற்கும் நான் முக்கிய காரணம். அதனால் தான் திமுகவினருக்கும், அக்கட்சித் தலைவருக்கும் என்மேல் கோபம் ஏற்பட காரணம் எனக்கூறியுள்ளார்.