அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் முக.ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா அஞ்சலி

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் முக.ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து காலமான மதுசூதனன் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று அதிகாலை எடுத்து வரப்பட்டு, உறவினர்கள் மரியாதை செலுத்திய பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுக முன்னனி நிர்வாகிகளும், தொண்டர்கள் என பலரும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் ஆறுதல் கூறினார். உடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக கொடிகட்டிய காரில் வந்து மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் மதுசூதனன் உடல் இன்று மாலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.