அதிமுக அலுவலகத்தில் கலவரம் குறித்து அலுவலக ஊழியர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணை

அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம்  11ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில்  புகார் அளித்தார்.

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த  முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி சகீல் அக்தர், அதிமுக அலுவலம் சூறையாடிய வழக்கை விசாரிக்க, சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் தனிக்குழு அமைத்தார்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், மோதல் வீடியோ பதிவுகளை ராயப்பேட்டை போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகள் கடந்த 7ம் தேதி  அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரம் குறித்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.