
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேரை நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானவர்களாகத் தேடல் குழு இறுதி செய்தது.
இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 5 பேர், சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் இருவர் ஆகியோர் உள்ளிட்ட 10 பேருக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தமிழகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஆர்.வேல்ராஜை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.