அக்கம் பக்கத்தினர் கேலி செய்வார்கள் என்பதால் பச்சிளங்குழந்தையை 3-வது மாடியில் இருந்து வீசி கொன்ற இளம்பெண்

டெல்லி அசோக் நகர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை தெருவில் வீசியது யார்? என விசாரித்தனர். இதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

 புதுடெல்லி: டெல்லி அசோக்நகர் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பு அருகே சாலையில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து டெல்லி அசோக் நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த குழந்தையை தெருவில் வீசியது யார்? என விசாரித்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் ஒரு குடியிருப்பில் உள்ள குப்பை தொட்டியில் இரத்த கறை படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குப்பை தொட்டியில் குப்பைகள் கொட்டியது அதே குடியிருப்பின் 3-வ து மாடியில் வசித்து வந்த இளம்பெண் என தெரியவந்தது. போலீசார் 3-வது மாடிக்கு சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் திருமணமாகாமல் கர்ப்பம் ஆனதும், வீட்டில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அக்கம் பக்கத்தினர் கேலி செய்வார்கள் என்பதால் குழந்தையை வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக வெளியே வீசியதாக அந்த பெண் கூறினார். அந்த பெண் குழந்தை பெற்று ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் அவர் மிகவும் பலவீனமாக காணப்பட்டார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்ததும், அந்த பெண் கைது செய்யப்படுவார் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.