ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இனி தமிழகத்தில் அனுமதி கிடையாது அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்

விளை நிலத்தையும் விவசாயத்தையும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட  எந்த ஒரு எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் புதுக்கோட்டையிலிருந்து-அறந்தாங்கி வரை செல்லும் நகரப் பேருந்து வழித்தட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் ஆகியோர் புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்து சிறிது தூரம் அந்த பேருந்திலேயே பயணித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்:கடலோரங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயத்தையும் விளை நிலத்தையும் பாதிக்கும் எந்த ஒரு எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த ஒரு போதும் தமிழக முதல்வர் அனுமதிக்க மாட்டார் என்றும் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும் கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களிலும் மத்திய அரசு எண்ணெய் எரிவாயு திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒப்புதல் கேட்டபோது அதனை உடனடியாக நிராகரித்தவர் தமிழக முதல்வர் என்றும் டெல்டா மாவட்டங்களை தமிழக முதல்வர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருகிறார் அதே போல் பிற பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகளில் தற்போது துணிப்பையில் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் மக்களும் துணிப்பையை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்றும் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் மஞ்சள் பை பயன்பாடு மட்டுமே இருக்கும் இந்த ஆண்டு நீர் மேலாண்மைக்கு தமிழக அரசுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ள நிலையில்,நீர் மேலாண்மையை பாதுகாக்க தமிழக முதல்வர் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த உள்ளார்,வரும் காலங்களில்  நீர் மேலாண்மையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

31 + = 36