“ஸ்வாமியே சரணம் ஐயப்பா” கோஷம் முழங்க இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அவர்கள் ஒரு மண்டலம் முதல் 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்தாண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று நவ.17ம் தேதி தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27ம்தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

இதில், பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தமிழகத்தில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தாண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி ஸ்வாமியே சரணம் ஐயப்பா கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

இதேபோல், புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர். ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்களுக்கு காளீஸ்வர குருக்கள் மாலை அணிவித்தார்   இதுபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், தண்டாயுதபாணி கோயில், சீதாபதி விநாயகர் கோயில்,  குமரமலை பாலதண்டாயுதபாணி  கோயில், வரசக்தி விநாயகர் கோயிலில் உள்ள பூங்காநகர் ஐயப்பன் சன்னதியில் இன்று அதிகாலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + = 9