
தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட நகரங்களில் இதுவரை 47% அளவில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 நகரங்களை நவீனப்படுத்த ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், ஒன்று அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதுவரை 47% அளவில் மட்டுமே பணிகள் நிறைவுப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் மட்டுமே சிறப்பாக செயலாற்றி வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், உஜ்ஜயின் நகரங்களிலும் குஜராத்தில் ராஜ்கோட், சூரத் ஆகிய நகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனியார் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
டெல்லி, நாகலாந்து மாநிலங்கள் சுமார் 70% ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை நிறைவு செய்ய உள்ளதாகவும் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா ஆகிய 7 மாநிலங்கள் 50-60 விழுக்காடு பணிகளை நிறைவேற்றி இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் பெரும்பாலான மாநிலங்களில் முடங்கி இருப்பதற்கு கொரோனா பெருந்தொற்று காரணமே கூறப்படுகிறது.சில மாநிலங்களில் நிதி பற்றாக்குறை எதிரொலியாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.