முதல்வர் ஸ்டாலின் நடத்தும் திராவிட மாடல் ஆட்சியில், சட்டம், ஒழுங்கு அடியோடு சீரழித்து விட்டது என, அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற, எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு, கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைத்தலைவரும், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, கே.என்.ராம ஜெயலிங்கம் முன்னிலை வகித்து பேசினார். சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில்:
ஸ்டாலின் கடந்த 20 மாத கால ஆட்சியில் செய்த சாதனை, போட்டோ ஷூட் நடத்தியது, மற்றும் சைக்கிளில் சென்றது ஆகியவைதான். அவரை பொம்மை முதலமைச்சராக வைத்து, அவரது குடும்பத்தினர் தான் ஆட்சி நடத்தி வருகின்றனர். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதுதான் உதயநிதியின் அடையாளம். கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, அவரை எம்.எல்.ஏ வாக்கி, அமைச்சராக்கிய ஸ்டாலின், தனது 20 மாத கால ஆட்சியில், அரச பரம்பரையை போல, தனது மகனுக்கு முடி சூட்டியுள்ளார். அதன் பிறகு உதயநிதி திண்டுக்கல் சென்றபோது, திமுகவில் மூத்த முன்னோடிகளில் ஒருவராக உள்ள பெரியசாமி, இவர் முன் கையை கட்டிக்கொண்டு நிற்கிறார். உதயநிதி மகன் இன்பநிதி வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என திருச்சியை சேர்ந்த அமைச்சர் நேரு பேசுகிறார்.
ஆனால் அதிமுகவில் கடைக்கோடி தொண்டனாகிய நான் தலைமை பதவியில் உள்ளேன். அதிமுகவை பொருத்தவரை ஜாதி,மதம் கிடையாது. கட்சித் தொண்டர்களாகிய நீங்கள் ஆதரித்ததால்தான் நான் தலைமை பதவிக்கு வந்துள்ளேன். அதற்கு ஏற்ப, உங்களுக்கு நன்றி உள்ளவனாக நான் விளங்குவேன். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட, உயர் பதவிக்கு வர முடியும். உணவு, குடிநீர் இரண்டும் இருந்தால் தான், மனிதன் உயிர் வாழ முடியும். அதனால்தான் நான் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, விவசாய மேம்பாட்டு பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தினேன். ஆனால் திமுக ஆட்சியில் இப்போது, கலெக்ஷ்ன் கரப்ஷன் கமிஷன், இந்த மூன்றும் தான் நடக்கிறது.
இந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்ட போது, அங்கு சென்ற ஸ்டாலின், உதயநிதி, ஆகியோர் எங்களை விமர்சனம் செய்து பேட்டி கொடுத்தனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வு காரணமாக 15 உயிர்கள் போய் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என முதல் கையெழுத்து போடப்படும். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும் என, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கூறினார்கள். இவை அவ்வளவும் பொய் என, இப்போது நிரூபணம் ஆகி உள்ளது. 2018 ல் நடைபெற்ற எனது ஆட்சி காலத்தில், அரசு பள்ளியில் படித்த ஒன்பது பேர் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வானார்கள். நான் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினேன். அதனால் இந்த ஆண்டு, அரசு பள்ளியில் படித்த 564 மாணவ, மாணவிகளுக்கு, எம்பிபிஎஸ் சீட்டு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மாணவியர்களான அவர்களுக்கு, கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்க்கும் என உத்தரவிட்டேன். இதில் ஸ்டாலினை போல, திராவிட மாடல் எனக்கூறி, மக்களை ஏமாற்ற வில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் , கிராம பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை சீரமைக்க, குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் ஒரே ஆண்டில், அரியலூர் உட்பட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள், ஏழு சட்டக் கல்லூரிகள், ஜெயங்கொண்டம் உட்பட பல்வேறு ஊர்களில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கி, இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் முதல் மாநிலம், என சிறப்படையச் செய்தேன். மேலும் அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை, 800 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் மாநில அளவில் அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்திய முதியோர் உதவி திட்டத்தை ஸ்டாலின் அரசு சீரழித்ததுடன், திருமண உதவித் திட்டத்தையும், கை கழுவி விட்டது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை, திமுக அரசு இப்போது ரிப்பன் வெட்டி திறந்து கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சியில், நகர்புறத்தில் 100 முதல் 150 சதவீதம் வரை கட்டிடங்களுக்கு வரி உயர்வு , மின்சார கட்டணம் உயர்வு. மேலும் இவர்களது இருபது மாதகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. இது பற்றி தட்டி கேட்டால் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். கட்டுமான பொருட்கள் அனைத்தும் கடுமையான விலை உயர்வு. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்ற இவர்களது தேர்தல் வாக்குறுதி, இவர்களது 20 மாத ஆட்சிக்கு பிறகும் செயல்படுத்தப்படவில்லை. தேர்தல் வரும்போது ஒரு பேச்சு ஆளும் கட்சி ஆன பிறகு மற்றொரு பேச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என, இவர்களை கேட்க விரும்புகிறேன்.
எனது ஆட்சி காலத்தில், 22 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. மக்காச்சோளத்தில், அமெரிக்கன் படைப் புழு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 250 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தேன். இது பற்றி நான் சட்ட சபையில் கூறும் போது, எதிர்க்கட்சித் தலைவர் அரைவேக்காடு என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் பொய் பேசுவதில் சிறந்தவருக்கு வழங்கப்படும் கோயபல் பரிசை அவருக்கு வழங்கலாம். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், 52 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் பேருக்கு, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப் வழங்கும் திட்டமும், தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், தற்போது சினிமா துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நூறு கோடி முதல் 200 கோடி வரை முதலீடு செய்து, ஒவ்வொரு படத்தையும் விலைக்கு வாங்கி, வெளியிடுகிறார்கள். துணிவு வாரிசு உட்பட பல முக்கிய படங்கள் இவர்களிடமிருந்து தப்பவில்லை. இந்தத் துறையில் தான், கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியும். இங்கே தற்போது 150 திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கின்றன. அடி மாடு அளவுக்கான, விலை பேரம் தான் இதற்கு காரணம். உதயநிதி குடும்பத்தாரால் இவை முடக்க பட்டுள்ளன. இதன் மீது நீதிமன்ற வழக்கு வரும். அதிலிருந்து இவர்கள் தப்பிக்க முடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக மாநில, மாவட்ட, வட்டார, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் உள்பட, பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தின் முடிவில், கட்சியின் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர், பொய்யூர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.