நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் ஆமின் பூனவல்லாவுக்கு எதிராக டெல்லி போலீசார் 6,629 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் இணை ஆணையர் மீனு சவுத்ரி, ”ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தோறாயமாக 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இதில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்களிடம் பெற்ற அறிக்கையை இணைத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார். கொலைக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மீனு சவுத்ரி, ”சம்பவத்தன்று ஷ்ரத்தா தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். இது அஃப்தாபுக்குப் பிடிக்கவில்லை. இதனால், ஏற்பட்ட கோபத்தில் அவர் ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த ஷ்ரத்தாவும், அஃப்தாபும் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். தொடக்கத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள், பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். பிறகு, அஃப்தாபின் சொந்த ஊரான மும்பைக்கு அருகில் உள்ள வசை-ல் சில மாதங்கள் ஒன்றாக தங்கி உள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அவர்கள் டெல்லிக்குச் சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். டெல்லி சென்ற ஒரு சில வாரங்களிலயே அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு அது கொலையில் முடிந்துள்ளது.
ஷ்ரத்தாவின் காதலை அவரது குடும்பத்தினர் ஏற்காததால், அவரை தொடர்புகொள்ளாமல் இருந்துள்ளனர். ஷ்ரத்தாவின் தோழி ஒருவர் கேட்டுக்கொண்டதை அடுத்தே, ஷ்ரத்தாவின் தந்தையான விகாஸ் வாக்கர், மகளை பார்க்க டெல்லி சென்றுள்ளார். அங்கு மகள் இல்லாததை அடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அஃப்தாபை தேடிய போலீசார் கடந்த ஆண்டு அக்டோபரில் அவரை அவரது சொந்த ஊரில் கைது செய்தனர். இதையடுத்தே, ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஷ்ரத்தாவை கொலை செய்த அஃப்தாப், அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய நிலையில், போலீசார் பல்வேறு துண்டுகளை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.