விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கென 273 பக்கங்கள் கொண்ட பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அதன்படி, அவர் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன். நிகர சாகுபடி பரப்பை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற வழி வகை செய்யப்படும்.
படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக முப்பத்தி ஆறு மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும். ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை. பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும். பனைமரங்களை வெட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும்.
ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060 ஆகவும், சாதாரண ரகம் ரூ.2,015 ஆகவும் கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை சன்ன ரகத்திற்கு ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும். இத்திட்டம் ரூ.45 கோடி மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவீத மானியம் (அல்லது) 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு. இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர். கரும்பு உற்பத்திக்கான சிறப்பு திட்டத்திற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறிய அளவில் 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
முதல் அமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் 114 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
தென்னை சாகுபடி திட்டத்திற்கு ரூ.10.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க வேளாண் மண்டல குழு அமைக்கப்படும். விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்கு நடப்பாண்டில் ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் அதற்கென தனி அமைப்பு ஒன்று வழங்கப்படும். மீன்பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்.
பல்வேறு பயிர்களின் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் `நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ தொடங்கப்படும்.
விவசாயத்திற்கான இலவச மின்சாரத்திற்கு நடப்பாண்டில் ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு. பயிர் காப்பீடு திட்டத்தில் 2வது தவணையாக ரூ.1,248.98 கோடி விரைவில் விடுவிக்கப்படும்.
வட்டார அளவில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற செயலி, இணையதளம் ஆகியவற்றில் முன்பதிவு செய்ய நடவடிக்கை. புதிய வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்ய ரூ.23.29 கோடி நிதி ஒதுக்கீடு.
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு. வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்க 185 டிராக்டர்கள், 185 ரோட்டரேட்டர்கள், 4 மருந்து டிரோன்கள் கொள்முதல். சிக்கன நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ரூ.982.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.