வேளாண் சட்டங்கள் – பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின்

  ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களால் என்னென்ன பாதிப்புகள் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய மு.க.ஸ்டாலின், ”இப்படியான நெருக்கடியான சூழலை ஒன்றிய அரசுதான் உருவாக்கியிருக்கிறது. வேளாண்மையை மேம்படுத்தவும், உழவர்களை காப்பாற்றுவதற்காக கொண்டுவருகிறோம் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. ஆனால், அந்த சட்டங்கள் அதை உணர்த்தும் வகையில் இல்லை. வேளாண்மையை அழிப்பதாக இருக்கிறது என வேளாண் மக்கள் கூறிவருகிறார்கள்.

அதற்காக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு போராட்டம் நடந்ததில்லை. இந்த சூழலில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மாநில அரசுடன் ஆலோசனை நடத்தாமல், தன்னிச்சையாக சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

ஆனால், குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்து இந்தசட்டங்களில் எதுவும் குறிப்பிடவில்லை. ஒன்றிய அரசின் இந்த சட்டத்தால் மாநில அரசின் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. தங்களின் நில உடைமை பறிபோகும் என உழவர்கள் அஞ்சுகிறார்கள். உழவர்களை விட விலை பொருட்களை வாங்கும் தனியாருக்கு சாதகமாக இந்த சட்டம் இருக்கிறது. இடு பொருட்களின் விலை, விலை பொருட்களுக்கான விற்பனை விலைக்கு இணக்கமாக இருக்காது. மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க சட்டத்தில் வழியில்லை. குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்படும். விலை பொருட்களுக்கு உரிய விலை உழவர்களுக்கு கிடைக்காது. சந்தையில் செயற்கையான விலை ஏற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கும் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டியிருப்பதால் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளோம். விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்த அரசு மதிப்பளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.