வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு காரைக்காலில் இயற்கை விவசாயி  பயிற்சி

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 40 மாணவ, மாணவியர் ஊரக, விவசாய மற்றும் வேளாண் தொழில் பணி அனுபவ பயிற்சியின் ஒரு அங்கமாக கல்லூரி இணை பேராசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பராமரித்து பாதுகாத்து சாதனை செய்த வடக்கு வரிச்சிக்குடி கிராம இயற்கை விவசாயி பாஸ்கர் வயலுக்கு சென்று பயிற்சி பெற்றனர்.

அப்போது இயற்கை விவசாயி பாஸ்கர் மாணவ, மாணவியருக்கு மரபு ரகங்களின் பிரத்தியேக மாறுபட்ட பண்புகள், சிறப்பு அம்சங்கள், வேறுபாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கூறினார். கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், கருங்குறுவை, பால்குடை வாழை, ஒட்டடையான்,  காட்டுயானம் போன்றவற்றை விளக்கினார்.

ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகங்களுக்கும் ஒவ்வொரு குணமுள்ளது. ஆகையால் பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட வேண்டும். அதன் மூலம் “உணவே மருந்து மற்றும் மருந்தே உணவு” என்பது வாழ்வியலாக மாறும் என்றார்.

கடந்த ஆண்டு கருப்புக்கவுனி ரகம் மிக பிரபலமாக பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு சீரக சம்பா மற்றும் தூயமல்லி பிரபலமாக பயிரிடப்பட்டன. பாரம்பரிய நெல் ரகங்களின் மகசூல் குறித்து எடுத்துரைத்தார். 6 பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சில முக்கிய தானியங்களை பயன்படுத்தி மதிப்புக்கூடல் செய்து  தயாரிக்கும் சத்துமாவின் மருத்துவ குணங்கள் குறித்தும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இணை பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமை வகித்து பேசுகையில். காரைக்கால் மாவட்டம் மட்டுமல்ல புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த பாஸ்கர் பண்ணை ஒரு ‘பல்லுயிர் பாதுகாப்பு மரபணு வங்கி’ . உணவு, நுண்ணூட்டம், மற்றம் விதை பாதுகாப்பை உறுதி செய்து நாடு தன்னிறைவு பெற ஏதுவாக வளர்ச்சியில் தனது பங்களிப்பை நிலைநாட்டி உள்ளார், என்றார்.

மாணவர்கள் அனைவரும் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களை நேரில் கண்டு அறிந்தனர். அடுத்ததாக மாணவ மாணவியர் தங்களது சந்தேகங்களை விவசாயி பாஸ்கரிடம் கேட்டறிந்தனர். முன்னதாக மாணவி அபிநயா வரவேற்றார். மாணவி ஸ்ரீதாரணி நன்றி தெரிவித்தார்.

களப்பணிக்கான ஏற்பாடுகளை மாணவர் முஹம்மது  ஃபர்ஹானுதீன் மற்றும் மாணவிகள் அபர்ணா, மாலினி செய்திருந்தனர். மாணவர்கள் கிறிஸ்டோபர், திரவியம், மாணவி கிருத்திகா இந்நிகழ்ச்சியை ஆவணமாக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 33 = 34