வேலூர் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து

காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(20). வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக பழகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதில் இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்டு பேருந்து நிலையத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியை குத்திய பின்பு மாணவர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அப்பொது அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமார் கூறுகையில், நானும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்தோம். திடீரென அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவர் வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசுகிறார். அவர் அந்த மாணவரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி நான் கேட்டபோது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் மாணவியை கத்தியால் குத்தினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 1