உலகின் தலைசிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கல்விகொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு கொள்கையை யுஜிசி வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் விரைவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில்:
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிளைகளைத் தொடங்க யுஜிசியின் அனுமதி தேவை. அந்த பல்கலைக்கழகங்கள் முழுநேர பாடத்திட்டத்தை மட்டுமே கற்பிக்க வேண்டும். ஆன்லைன் அல்லது தொலைநிலை கல்வித் திட்டத்தை வழங்க முடியாது. வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு 10 ஆண்டுகள் ஆரம்ப அனுமதி வழங்கப்படும். அவற்றின் பிரதான வளாகங்களில் வழங்கப்படும் கல்வியின் தரம் இந்திய வளாகத்திலும் உறுதி செய்யப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை செயல்முறைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ளலாம்.
கல்வி கட்டணம் நியாயமானதாக, வெளிப்படையாக இருக்க வேண்டும். வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் உரிமத்தை நீட்டிப்பது குறித்து 9-வது ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.