கிருஷ்ணகிரியில் பெய்துவரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்த கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை 12வது வார்டில் உள்ள நல்லதம்பி செட்டி தெரு பகுதியில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு உள்ள கழிவு நீர் கால்வாய்கள் முறையாக இணைப்பு வழங்காததால் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும். மேலும் மழை அதிகமாக உள்ள நேரங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள்ளேயும் சென்று விடும். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் தொற்று பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்த கன மழையால் மீண்டும் வீடுகளை சுற்றி கழிவு நீர் தேங்கியதுடன் கடும் துர்நாற்றம் வீச துவங்கியது. பல ஆண்டுகளாக இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்பொழுதும் கழிவு நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் ஆத்திரமடைந்த நல்லத்தம்பி தெரு வாசிகள் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு மாவட்டத்தலைவர் கமலகண்ணன் தலைமையில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழையபேட்டையில் இருந்து 5 ரோடு செல்லும் குப்பம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த நகர காவல்துறையினர் மற்றும் நகராட்சி துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டத்தால் குப்பம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.