விராலிமலை ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

விராலிமலையில் தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விராலிமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் விராலிமலை ஊராட்சிக்கு உட்பட்ட 12 வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த ஆய்வு கூட்டத்தில்   ஊராட்சியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர்கள் சிலர் தங்களது பகுதிகளுக்கு எந்தஒரு அடிப்படை பிரச்சனைக்கான தீர்வுகளை இதுவரை ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.

அதில் உடன்பாடு எட்டாததையொட்டி வார்டு உறுப்பினர்கள் 8 பேர் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.அதனை தொடர்ந்து அவர்கள் ஊராட்சி மன்ற வாசலில் நின்று வார்டு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி தலைவரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்:-

விராலிமலை ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் தலைவர் ஊராட்சி நிர்வாகத்தில் நடக்கக்கூடிய வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட எந்த ஒரு திட்டங்களையும் வார்டு உறுப்பினர்களான எங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். மேலும் தலைவர் எந்த வார்டில் இருக்கிறாரோ அந்த வார்டில் மட்டும் நலத்திட்டங்களை செய்துகொள்கிறார். ஊராட்சியில் உள்ள 12வார்டுகளுக்கும் நலத்திட்டங்களை பிரித்து கொடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். நாங்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 3வருடங்கள் ஆகிறது இதுவரை ஊராட்சி நிர்வாகத்தில் நிர்வகிக்கப்படும் எந்த ஒரு வரவு செலவு கணக்குகளும் எங்களுக்கு தெரியாது. இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி நகராட்சிக்கு இணையாக மக்கள்தொகை உள்ள இந்த விராலிமலை ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் எதுவும் நிறைவுபெறவில்லை எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இந்த பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி தனி குழு அமைத்து விராலிமலை ஊராட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 5 =