விராலிமலை அருகே கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை  ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 31வது கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர்  கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கொரோனா தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றியமையாததாக உள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் 60 வயது மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள், காவல்துறை பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் என சுமார் 3000 இடங்களில் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி  18 வயதிற்கு மேல் 12, 75, 298 (99%) நபர்கள் முதல் தவணையும், 12,06,559 (93%) நபர்கள் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளார்கள். முன்னெச்சரிக்கை தவணையானது, அரசு கோவிட் தடுப்பூசி மையத்தில் 16, 949 (சு.ப./மு.க.ப./60 வயதிற்கு மேல்) நபர்களுக்கு செலுத்தப்பட்டு, மாநில சராசரியை விட புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலான அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 55, 570 கோவிஷ்ல்டும், 40, 500 கோவேக்சினும் 11,360 கார்பிவேக்ஸ் என ஆக மொத்தம் 1,07,430 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தற்போது ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் படி 2ஆம் தவணைக்கு பிறகு முன்னெச்சரிக்கை தவணைக்கு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 458 ஊராட்சிகளில் 100% (குறைந்தபட்சம் ஒரு தவணை) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, அவசியம் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர்    டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் லதா இளங்குமரன், ஒன்றியக் குழு உறுப்பினர்  மு.பி.ம.சத்தியசீலன், துணை இயக்குநர்கள் (பொது சுகாதாரம்) மரு.அர்ஜுன்குமார், மரு.கலைவாணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 − = 50