விமான நிலைய கழிவறையில் ரூ.1 ¼ கோடி தங்கத்தை போட்டு சென்ற மர்ம நபர்கள்- அதிகாரிகள் விசாரணை

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர். இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விமான நிலைய அறை எண்.7-ல் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சிறிய அளவிலான பார்சல் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சமாகும். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சிலர் மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்தனர். அதில் வந்த சிலர் தான் அதிகாரிகளின் கெடு பிடியால் கடத்தி வந்த தங்கத்தை கழிவறையில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.