விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு

ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில், சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்பவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் பெங்களூருவில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். இதையடுத்து இன்று அவர் டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 354, 509, 510 மற்றும் இந்திய விமானச் சட்டம் பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

ஷங்கர் மிஸ்ரா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறஞர் மனு ஷர்மா, காவல் துறை விசாரணைக்கு ஷங்கர் மிஸ்ரா ஒத்துழைப்பு அளிப்பார் என்றும், எனவே அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஷங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்தவர் என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனாமிகா, ஷங்கர் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது காவல் துறையால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அவரை 14 நாட்கள் நதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். இதனிடையே, ஷங்கர் மிஸ்ராவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஷங்கர் மிஸ்ராவை சிறையில் அடைப்பதற்கு முன்பாக அவரது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மனு ஷர்மா, ”ஷங்கர் மிஸ்ராவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டு மட்டுமே ஜாமீன் அளிப்பதற்கு எதிரானது. மற்ற பிரிவுகளில் அவருக்கு விரைவில் ஜாமீன் கிடைத்துவிடும்” என்று தெரிவித்தார்.

கடந்த 26-ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பிஸினஸ் க்ளாஸ் பிரிவில் 70 வயது பெண் ஒருவர் பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த ஷங்கர் மிஸ்ரா மது அருந்திய நிலையில், அந்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், ஏர் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் கடந்த 4ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றிரவு பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டார்.

இதனிடையே, விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ராவை அவர் வேலை பார்த்துவந்த அமெரிக்க நிதி சேவை நிறுவனமான ‘வெல்ஸ் போர்கோ’ பணியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், இது தங்களின் நிறுவனத்துக்கு பெரும் அவமானம் என்றும் ஷங்கர் மிஸ்ராவின் செயலை கடுமையாக சாடியுள்ளது அந்நிறுவனம். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் மன்னிப்புக் கோரி உள்ளார். அத்துடன், ‘விமானங்களில் மது விநியோகிக்கும் எங்கள் கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

63 + = 67