விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 261 சிறப்பு ரயில்கள் இயக்கம் : ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

நாளை நடைபெறவிருக்கும் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 261 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

 நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டப்பட உள்ளது. இந்த ஆண்டு சில கட்டுப்படுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள்.  இந்நிலையில், பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக 261 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்றிய ரயில்வேயில் 201 சிறப்பு ரயில்களும் , மேற்கு ரயில்வேயில் 42 சிறப்பு ரயில்களும், கொங்கன் வழித்தடத்தில் 18 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.

மேலும், இந்த ரயில்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் 20 வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்கள் எங்கிருந்து புறப்படுகிறது?, அதற்கான வழித்தடங்கள் என்ன? இயக்கப்படும் நேரத்தின் அட்டவணைகள் ஆகியவற்றை www.enquiry.indianrail.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பதிவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்துள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும், ரயில் நிலையத்திற்கு வரும் வேலையிலும், பயணிக்கும் போதும் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.