விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு: வருகிற 9-ந்தேதி மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் டியூசன் சென்டர், அடுத்ததாக அடித்தட்டு மக்களுக்காக இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்.

தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசியல் கட்சிகளில் உள்ளது போல் அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இயக்கத்தினரை ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தில் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வருகிற 9-ந்தேதி பனையூரில் நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார்.