விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து : 25 விசைப்படகுகள் ஏரிந்து நாசம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையத்துக்கு அடுத்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 விசைப் படகுகள் தீயில் கருகி சேதமடைந்தன.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த படகுகள் ஒவ்வொன்றும் ரூ.40 லட்சம் மதிப்புடையது என்பதால், ரூ.15 கோடி வரை பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. சில படகுகள் பெட்ரோல் டேங்க் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களால் தீ பிடித்து எரிந்தது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 25 விசைப்படகுகள் சேதமடைந்திருக்கின்றன் என்று விசாகப்பட்டினம் டிசிபி ஆனந்த் ரெட்டி தெரிவித்தார்.

விபத்து குறித்து விசாகப்பட்டிம் மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி நிரஞ்சன் ரெட்டி கூறுகையில், “இன்று அதிகாலை 12.30 மணிக்கு தீ விபத்து குறித்து எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. அதிகாலை 4.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது. ஆந்திரப்பிரதேச தீயணைப்பு துறையைச் சேர்ந்த 8 தீயணைப்பு வாகனங்கள், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 3, வைசாக் எஃக்கு பிளான்டில் இருந்து 1, ஹெச்பிசிஎல் வைசாக் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து 1 மற்றும் கோரமண்டலில் இருந்து 1 என மொத்தம் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. இவை தவிர மிகப்பெரிய அளவிலான இந்த தீ விபத்தினை கட்டுப்படுத்த கிழக்கு கடற்படையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். என்றாலும் விபத்துக்குள்ளான படகு ஒன்றில் மது விருந்து நடந்ததாகவும், அதில் இரு குழுக்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு மது சிந்தியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்றாலும் சமூக விரோதிகள் சிலர் நள்ளிரவில் படகுகளுக்கு தீ வைத்திருப்பதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மீனவர் இளைஞர் நலசங்கத்தின் தலைவரான மூத்த மீனவர், அர்ஜிலி தாஸ் கூறுகையில், “இந்தச் சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகிப் போகலாம்.

படகுகளின் உரிமையாளர்கள் பல்வேறு கட்சிகளையும் வணிக நிறுவனங்களையும் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இடையேயான போட்டியும் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம். முதலில் தீப்பிடித்த படகு, அதன் உரிமையாளர், அவர்களின் பின்னணி போன்றவைகளை விசாரித்தால் விபத்து குறித்து போலீஸார் ஒரு முடிவுக்கு வரலாம்” என்று தெரிவித்தார்.