தூத்துக்குடி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் இன்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ, பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 12.30 மணியளவில் முறப்பநாட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த 2 நபர்கள் லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக முறப்பநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் இருச்சக்கர வாகனம் மூலம் ஆற்று மணலை எடுத்து சட்டவிரோதமாக கடத்தியுள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கடந்த 13-ம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்தது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த லூர்து பிரான்சிஸ் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடள் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு லூர்து பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், மனைவி பொன்சிட்டாள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதேபோல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியனை வல்லநாடு அருகே வைத்து போலீஸார் நேற்று கைது செய்தனர். மற்றொரு நபரான கலியாவூரை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (35) என்பரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே வைத்து மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் முறப்பநாடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மணல் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முறப்பநாடு, கலியாவூர், வல்லநாடு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.