வார இறுதி நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், ஏற்காடு சுற்றுலா தலத்தில் பருவகாலம் தொடங்கியுள்ளதால் கொரோனா 2ம் அலைக்குப் பிறகு அரசினால் அளிக்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து வெளி மாநிலம், மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சேலம் மாவட்ட மக்களும் ஏற்காடு இயற்கையை ரசிக்க, ஏற்காட்டில் அதிகளவில் குவிந்து அரசின் கொரோனா கடடுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளதால் கொரோனா பெருந்தொற்று மேலும் தீவிரமாக பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியவாறு ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் ஏற்காடு மக்கள் செல்ல கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும் பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் (அல்லது) கொரோனா பரிசோதனை செய்து கோவிட்-19 நெகடிவ் சான்று வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் தங்களிடம் உள்ள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார் கார்ட் போன்ற ஏதேனும் ஒரு தங்களின் இருப்பிட விலாசத்திற்கான ஆதாரத்தை காண்பித்தும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பணியாளருக்கான அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இவ்வுத்திரவு வருகிற 9ம் தேதி வரை அமுல்படுத்தப்படுகிறது.

மேலும், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் தேர்வுநிலை பேரூராட்சியின் வாரச்சந்தையானது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. மேற்படி வாரச்சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்தும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள், கோழிகள், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ய வியாபாரிகளும் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி செல்ல பொதுமக்களும் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி செல்ல பொதுமக்களும் அதிகாலை 4 மணி முதல் மேற்படி சந்தையில் ஒரே இடத்தில் அதிகளவில் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதால், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் பேரூராட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று நடத்தப்படும் வாரச்சந்தை வருகிற 9ம் தேதி வரை தடை விதித்து உத்திரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.