வள்ளியூர் நிலையை மையமாக வைத்து புதிய ரயில்வே கோட்டத்தை அமைத்து வள்ளியூர் ரயில் நிலையத்தின் அடிப்படை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோயில் – திருநெல்வேலி இடையே உள்ள வள்ளியூர் ரயில் நிலையம் வழியாக சென்னை, மும்பை, டெல்லி, கோவை, பெங்களூரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நின்று செல்வதால் அங்கு செல்வது பயணிகளுக்கு சிரமமாக உள்ளது. மேலும் குடிநீர் கழிவறை வசதி, பயணிகள் ஓய்வறை, கணினி ஒலிபெருக்கி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத நிலையே நீடிக்கிறது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளதாலேயே அடிப்படை வசதிகள் மேற்கொள்ள படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாகர்கோவில், நாங்குநேரி, பணக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களும் முறையாக பராமரிக்க படாததற்கும் இதுவே காரணம் என கூறும் அவர்கள் நெல்லையை மையமாக வைத்து தனிக்கோட்டம் அமைத்திட கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை கோட்டத்தில் இணைக்கப்பட்டாலோ அல்லது நெல்லையை தலைமை இடமாக கொண்டு புதிய கோட்டம் அமைத்தால் மட்டுமே வள்ளியூர், நாங்குநேரி, பணக்குடி, ஆரல்வால்மொழி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிபெறும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.