வலைதளங்களில் குழந்தைகள் வன்முறை வீடியோவை வெளியிடாதீர் என குழந்தைகள் நல செயற்பாட்டாளர் கோரிக்கை

குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த தாய் துளசி, ஆந்திராவில் கைது செய்யப்பட்டு விழுப்புரம் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 ஒன்றும் அறியாத ஒன்றரை வயதே ஆன பிஞ்சு குழந்தையை விழுப்புரத்தைச் சேர்ந்த தாய் துளசி இரக்கமின்றி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவர் மனதையும் கனமாக்கியுள்ளது. மோட்டூரைச் சேர்ந்த வடிவழகனுக்கும் அவரது மனைவி துளசிக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாயாரிடம் விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்த வடிவழகன் அங்கிருந்த மனைவியின் செல்ஃபோனை எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். இளைய மகனை துளசி கொடூரமாக தாக்கும் வீடியோக்களை அவரே பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தையை அவர் தாக்கியிருந்தது தெரியவந்தது.

 குழந்தையை தாய் தாக்கிய சம்பவம் தொடர்பாக வடிவழகன் அளித்த புகாரின்பேரில் துளசி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆந்திரா விரைந்த தனிப்படையினர், சித்தூரில் துளசியை கைது செய்தனர்.

 விழுப்புரத்தில் குழந்தை மீதான தாயின் தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் தெரிவித்துள்ளார். சமூகத்தில் குழந்தைகள் மீதான அடக்கு முறையும் வன்முறையையும் ஒடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக குறிப்பிட்டார்.

 குழந்தைகள் வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது எனவும் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மாறாக மாவட்டம், மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்படுவதால் அங்கு முறையிடலாம் என குறிப்பிட்டார். அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறினர். எனினும் சமூகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது அவசியமாகிறது என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.