வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது – முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு

வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது என முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. தமிழக முதல்வராக 5 முறையும் சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்தவர் கருணாநிதி. சீர்திருத்த சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், எம்எல்ஏ என பல பதவிகளை வகித்தவர். சமூக நீதிக்காக பாடுபட்டவர். தமிழக மக்களை காந்தக் குரலால் கட்டிப்போட்டு வைத்தவர்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலை நாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது. விளிம்புநிலை மக்களின் நலன் காக்க இந்த சட்டப்பேரவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. சட்டப்பேரவையின் வைரவிழா கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் படத்தை குடியரசுத் தலைவர் திறந்ததை பார்த்து முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன் என கூறினார்.