
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளம் பகுதியின் 15 ஆண்டுகால வறட்சிக்கு காரணமான வனத்துறை மற்றும் வனத்தோட்டக்கழகத்தின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து அரிமளம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு செய்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு டைமன்ட் கண்ணன் தலைமை தாங்கினார். குமார் முன்னிலை வகித்தார்.
இதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பணைகளை அகற்றி மழைநீர் தேங்கு குழிகளை இயற்கை மழைநீர் வழித்தடத்துடன் இணைக்க வேண்டும், அரிமளத்தை ஒட்டிய வனப்பகுதியில் நடைபெற்றுவரும் உழவுப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், அரிமளம் பேரூராட்சி வனப்பகுதியை ஒட்டி வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை முற்றிலுமாக அகற்றி சமூக காடுகளாக்கி, வன விலங்குகள் மற்றும் பல்லுயிரும் வாழ வழி செய்ய வேண்டும், பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் வடிகால் வசதியினை போர்க்கால அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அரிமளம் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை கூறி கோஷமிட்டனர்.