ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கத்தால் 200 திரைப்படங்கள் முடக்கம்: கடம்பூர் ராஜு எம்எல்ஏ குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் பாரபட்சமின்றி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டது. எனவே, தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரி இல்லை.

2006-2011 காலகட்டத்தில் குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே படங்களை வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 வரை திரைப்படத் துறையில் வெளிப்படைத்தன்மை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தனி நிறுவனத்தின் ஆதிக்கம்தான்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குகூட அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், இதற்கு பல்வேறு காரணங்களைத் தெரிவித்தனர். அதேநேரத்தில், ஜெயிலர் படத்துக்கு அனுமதி வழங்கினர். தற்போது கண்டனம் காரணமாகவே, லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி உள்ளனர். பாரபட்சமான இந்த முறை திரைத்துறைக்கு நல்லதல்ல. திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கடம்பூர் ராஜு கூறினார்.