ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் 2,02,496 சதுரஅடி பரப்பளவில் ஆறு தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தின் தரைத்தளத்தில், அஞ்சலகம், பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேர்தல்பிரிவு அலுவலகம் மற்றும் நன்கு சக்கர வாகன நிறுத்தம் ஆகியவையும், முதல் தளத்தில் வாகன நிறுத்தம், தொழிலகப் பாதுகாப்புத்துறை, குற்ற வழக்குகள் பதிவுத்துறை, புள்ளியல் துறை அலுவலகங்களும், இரண்டாம் தளத்தில் தேசிய தகவலியல் மையம், உதவி இயக்குநர் ஊராட்சிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்டக் கருவூலம் மற்றும் இரண்டு துணை ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியவையும், மூன்றாம் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் கலால், முத்திரை, சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை, தணிக்கை மற்றும் சுற்றுலாத்துறை அலுவலகங்கள் ஆகியவையும், நான்காம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்ட அரங்குகள், காணொளிக் கூட்ட அரங்கு, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை, இரண்டு துணை ஆட்சியர்கள் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள் அலுவலகங்கள் ஆகியவையும், ஐந்தாம் தளத்தில் அவசர கால உதவி மையம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம், நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தொழிற்பேட்டை உதவி இயக்குநர் மருந்துக்கட்டுப்பாடு மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவையும், ஆறாம் தளத்தில் துணை இயக்குநர் சுரங்கம், மகளிர் நலன் மேம்பாட்டு, உதவி இயக்குநர் நிதி மற்றும் தணிக்கை, மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்கள் இக்கட்டடத்தில் செயல்படும்.

சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தைச் சேர்ந்த மு. பாண்டிதேவி என்பவர், கொத்தனராக வேலை பார்த்து வந்த தனது கணவர் பணியின்போது இறந்து விட்டதாகவும், தனக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளதாகவும், இதில் மகன் மகாராஜா மூளை வளர்ச்சி குறைவால் இறந்து விட்டதாகவும், மகள் புவனேஸ்வரிக்கு கால் கட்டு, மணிகட்டு, மார்பு பகுதிகளில் எலும்பு வளர்ச்சி அதிகமாக உள்ளதால், கடன் பெற்று சிகிச்சை அளித்து வருவதாகவும், மேலும், வயதான தனது தாயையும் பராமரித்து வருவதாகவும், தற்போது தான் கூலி வேலை செய்து வறுமையில் வாழ்ந்து வருவதாகவும், எனவே தனக்கு அரசு வேலை வழங்கிட கேட்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு அளித்திருந்த மு.பாண்டிதேவி அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிவகாசி வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சித்துராஜபுரம் மேலூர் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிநியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர்  வழங்கினார்.  

முன்னதாக, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் முதல்வர் மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை  முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.மாணிக்கம் தாகூர், எம்.தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எஸ்.தங்கப்பாண்டியன் ஜி.அசோகன், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − 71 =