ரூ.1,000 உரிமைத்தொகை அனைத்து மகளிருக்கும் கேட்டு, பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி அக்டோபர் 18-ம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. முன்னதாக ரூ.1 அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 21-ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 56.5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.  இந்நிலையில் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி விழுப்புரத்தில் அக்டோபர் 18-ம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.