ரூபாய் வர்த்தகத்தில் பல நாடுகள் ஆர்வமாக உள்ளன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ரூபாயில் இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்ள பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்தியா தற்போது அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரும்பான்மையாக டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து விடுகிறது. மேலும், டாலருக்கு நிகரானரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. இது தவிர்த்து, அமெரிக்காவால் பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இந்நிலையில் இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய முடியும் என்று ரிசர்வ்வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

அதையடுத்து இந்திய வங்கிகள் வோஸ்ட்ரோ கணக்குளை திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. வோஸ்ட்ரோ கணக்குமூலம் இந்திய இறக்குமதியாளர்கள், அவர்கள் செலுத்தவேண்டிய தொகையை டாலருக்குப் பதிலாக ரூபாயிலே செலுத்த முடியும். அதேபோல் ஏற்றுமதியாளர்கள் அவர்களுக்குரிய தொகையை எதிர்நாட்டிலிருந்து ரூபாயிலே பெற்றுக்கொள்ளமுடியும். இந்நிலையில் டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பை தொடர்ந்து ரூபாயில் இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்ள பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, “மத்திய அரசு, இந்தியாவில் தொழில்வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்து வருகிறது. இவற்றால் ஈர்க்கப்பட்டு பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவை நோக்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்யதயங்குகின்றன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 12 = 19