ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் புனித தீர்த்தங்களில் நீராட தடை நீட்டிப்பு

வார விடுமுறையையொட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் இன்று காலை முதல் தடை நீக்கபட்டதால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடித்து வருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் வார விடுமுறை என்பதால் அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு கோவிலில் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தடை விதிக்கபட்டதால் கடந்த 3 நாட்களாக சுவாமி தரிசனம் செய்ய வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் கோயில் நுழைவாயிலுக்கு எதிரே நின்று சுவாமி தரிசனம் செய்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் இன்று காலை முதல் நேரடியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் திருக்கோயில் வளாகத்திற்கு எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராட கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததன் அடிப்படையில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு தடையை நீடித்து உத்தரவிட்டது. இதனால் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.