ராமேஸ்வரம் – காசிக்கு 200 பேர் ஆன்மீக சுற்றுலா காசி தமிழ் சங்கத்துக்கு போட்டியா?: மக்கள் குழப்பம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், காசிக்கு ஆன்மீக சுற்றுலா பயணத்துக்கு 200 பேரை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு இந்தாண்டில் 200 நபர்கள் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு டிசம்பர் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மீகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஏற்கனவே, உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ்ச்சங்கம் என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியை நாளை (19ம் தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஒரு மாதம் நடைபெறும் இந்த கலாசார விழாவில் தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள தொடர்பு தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 12 குழுக்கள் கலந்து கொள்கின்றன. இதற்காக ராமேஸ்வரம், கோவை, சென்னையில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், கலந்துகொள்ள 2,500 பேர் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு, தங்கும் இடம், போக்குவரத்து அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.,பயிற்சி அளிக்க திட்டம் வகுத்துள்ளனர். தமிழக அரசு இதை வேடிக்கை பார்த்தால் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசும், ராமேஸ்வரம் – காசிக்கு 200 பேர் அழைத்துச் செல்லப்படுவர் என்ற அறிவிப்பால் மக்களும், ஆன்மிக வாதிகளும், சமுக ஆர்வலர்களும் குழம்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 20 = 29