”ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க.வில் இணையமாட்டார்” – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ”அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது, தமிழகத்தின் மின்சாதன பொருட்களின் விலை அதிகரித்த போதும் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த கடன்கள் தி.மு.க ஆட்சியிலும் இருந்தவைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் மக்களின் குறைகள் சரிசெய்யப்படும் என்ற வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் பேசிய அவர், ”அ.தி.மு.க ஆட்சியில் நிதிநிலை சீர்கேடாக இருந்தது எனக் கூறுவது முற்றிலும் தவறானது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைவதாக பரவும் செய்தி தவறானது. அவர், பா.ஜ.கவில் இணைய மாட்டார். ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டே அவதூறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன” என்றார்.