ராகுல் காந்தி ட்விட்டர் தடை விவகாரம்: பறவையை சமைத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன எதிர்ப்பு

காங்கிரஸ் பிரமுகரான ஜி.வி.ஸ்ரீ ராஜ், ராகுல் காந்தியின் தற்காலிக ட்விட்டர் முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’ட்விட்டர் பறவை’யை சமைப்பதாக கூறி, ஆந்திராவில் நூதனமாக சமையல் நிகழ்ச்சியொன்றை நடத்தியுள்ளார்.

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பலியான 9 வயது சிறுமியின் குடும்பத்தினர் புகைப்படத்தை பகிர்ந்தமைக்காக, ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தை தற்காலிகமாக முடக்கியது அந்நிறுவனம். ராகுல் காந்தியின் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருந்த பிற காங்கிரஸ் கட்சியினரின் பக்கங்களும்கூட முடக்கப்பட்டது. ஒரு வார முடக்கத்துக்குப் பின், அப்பக்கங்கள் மீண்டும் வழக்கத்துக்கு வந்தது.

இருப்பினும் அந்த முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். அப்படியான ஒருவராக, ஜி.வி.ஸ்ரீ ராஜ் என்ற காங்கிரஸ் பிரமுகர், இன்று ட்விட்டர் பறவை எனக்கூறி பறவையொன்றை சமைத்திருக்கிறார். இதன் வீடியோ, ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில், “ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கியும், எங்களின் ட்வீட்களை ப்ரமோட் செய்யாமலும் இருந்து, ட்விட்டர் நிறுவனம் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டது. அதனால்தான் இந்த (ட்விட்டர்) பறவையை சமைத்து, இதை ஹரியானா மாநிலத்திலுள்ள குர்கான் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ட்விட்டர் நிறுவன தலைமையகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்” எனக்கூறி, சமைத்தவற்றை பேக் செய்கிறார். தொடர்ந்து அதை அனுப்பிவைப்பதாகவும் கூறியுள்ளார்.