யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றப்படுவாதால் யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி

யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் அதனை ஏன் தடைசெய்யக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி,  தற்போதைய  முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ததால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுபடி , இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் கொடுத்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சாட்டை துரைமுருகன்  மீண்டும்  தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு நிபந்தனையுடன் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி  தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது, அரசு தரப்பில், சாட்டை துரைமுருகன் மீது குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி புகழேந்தி, அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாட்டை துரைமுருகன் என்ன தொழில் செய்கிறார்? யூடியூபில் இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதன் மூலம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் , என உத்தரவிட்டார்.மேலும் யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? வங்கிக் கொள்ளை போன்ற விபரங்களை யூடியூப் மூலம் கற்றுக் கொடுத்து கொண்டு இருப்பதை எவ்வாறு ஆதரித்து வருகிறார்கள்?இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? வேறு மாநிலத்தில் இருந்து தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது?

யூடியூபில் நல்ல விஷயங்கள் உள்ளது. ஆனால் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? யூடியூபை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாகவும், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாகவும், கள்ளச்சாராயம் தயாரிப்பதாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளது இதனை எவ்வாறு தடுக்க போகிறோம்? மேலும் யூடியூப் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து , ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில்  அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + = 23