தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு விசாரணையில் ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் வசந்தி கைது செய்யப்படுவதற்கு முன்பு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது வசந்தியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்தே வசந்தி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வசந்தியின் முன் ஜாமீன் மனு நீதிபதி பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், இந்த வழக்கின் தற்போதைய நிலையை அறிய நீதிமன்றம் விரும்புகிறது. வசந்தி கைது செய்யப்பட்ட பிறகான வழக்கின் விசாரணை குறித்து போலீஸாரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் கேட்டதன் பேரில் வழக்கின் விவரங்கள் பற்றி விசாரணை அலுவலர் தரப்பில் விளக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியால் காவல்துறைக்கே களங்கம்.யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு காவல்துறை ஏற்படுத்த வேண்டும். காவலர்களே குற்ற செயல்களில் ஈடுபடுவதால் சாதாரண மக்கள், காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது, என்றார். மேலும் விசாரணையை பாதிக்கும் என்பதால் வழக்கின் விவரத்தை தர இயலாது என்று கூறிய நீதிபதி, முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.